ஊத்துக்கோட்டை மண்ணடி மாரியம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில், பெண்கள், சிறுவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன்  செலுத்தி வழிபட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கிராம தேவதையான  மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா கடந்த 17 தேதி தொடங்கியது.  அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை செல்லியம்மன் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்னர். இதற்கு முன்னதாக, செல்லியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே நாள் மாலை அங்காளம்மன் மற்றும் எல்லையம்மன்  கோயிலிலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் கரக ஊர்வலம் நடைபெற்றது.

 இதில், 3வது நாள் இரவு உற்சவரான மாரியம்மன் ரெட்டி தெரு, செட்டி தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக திருவீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர்,  மண்ணடியில் அம்மன் இறக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனை வலம் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும், கும்பசாதம் மலை போல் குவிக்கப்பட்டு அம்மனுக்கு  படையல் வைத்தனர், அதை பக்தர்கள் பிரசாதமாகவும் வாங்கி சென்றனர்.

Related Stories: