×

பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் முறையான விசாரணை நடக்கவில்லை என்று தனி நீதிமன்றத்தின் மீது புகார் கூறிய நடிகைக்கு கேரள ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என்றும் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி நீதிமன்றத்தின் மீது புகார் கூறிய  நடிகைக்கு நீதிபதி கடும் கண்டனம்  தெரிவித்தார். ‘எந்த அடிப்படையில் தனி நீதிமன்றத்தின் மீது புகார் கூறுகிறீர்கள்?’ என்று நடிகையின் வக்கீலிடம் நீதிபதி கேட்டார். போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்த விவரங்களின் அடிப்படையில் தெரிவிப்பதாக வக்கீல் கூறினார். ‘அப்படி என்றால், போலீசார் தங்களுக்கு கிடைக்கும் விவரங்களை உங்களுக்கு ரகசியமாக தருகிறார்களா?’ என்று நீதிபதி கேட்டார். தனி நீதிமன்றத்தின் மீது தேவையில்லாமல் புகார் கூறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகையின் வக்கீலுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : ICourt , ICourt warns the actress victim of rape case
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு