×

ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ், ரோகித்: மும்முறை தாண்டுதலில் எல்தோஸ் முன்னேற்றம்

ஓரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் நகரில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. ஏ பிரிவு தகுதிச் சுற்றில் தங்க நாயகன் நீரஜ் சோப்ராவும், பி பிரிவில் ரோகித் யாதவும் களம் கண்டனர்.  ஏ பிரிவில்  நீரஜ்  அதிகபட்சமாக 88.39மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து  முதல் இடம் பிடித்தார். நீரஜ்ஜிக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப் பட்ட செக் குடியரசு வீரர்  ஜேகுப் 85.23மீ தொலைவுக்கு வீசி 2வது இடம் பிடித்தார். அதே நேரத்தில் பி பிரிவில்  கிரேனடா வீரர் ஆண்டர்சன் 89.91மீ தொலைவுக்கு ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து உள்ளார். இந்தப் பிரிவில்  மற்றொரு இந்திய வீரர்  ரோகித் 80.42மீ வீச 6வது இடம் கிடைத்தது.
இந்திய வீரர்கள் இருவரும் முதல் வாய்ப்பில் வீசிய தொலைவை,  அடுத்த 2 வாய்ப்புகளில் தாண்டவில்லை.

இந்த 2 பிரிவுகளிலும்  தலா 6 பேர் என   நீரஜ், ரோகித் உட்பட   12 பேர் இறுதிச் சுற்றுக்கு  தகுதிப் பெற்றுள்ளனர். அதிலும் இந்திய வீரர்கள் 2 பேர் ஒரே நேரத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறை. இறுதிச் சுற்று நாளை காலை நடைபெறும்.

ஆடவர் மும்முறை நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பால் எல்தோஸ், அப்துல்லா அபூபக்கர்,  தமிழக வீரர் பிரவீன் சித்திரைவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஏ பிரிவில் பங்கேற்ற  எல்தோஸ் 16.68மீட்டர் தாண்டி 6வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதே பிரிவில்  16.49மீட்டர் தாண்டி  8வது இடம் பிடித்த பிரவீனும்,  பி பிரிவில்  16.45மீ தாண்டி 10 இடம் பிடித்த அப்துல்லாவும்  இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்   மும்முறை தாண்டுதல்  இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை எல்தோஸ் படைத்துள்ளார்.

Tags : Neeraj ,Rohit ,Elthos' , Neeraj, Rohit in javelin final: Elthos' progress in triple jump
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...