×

ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; துணை ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 17 எம்பி.க்கள், 125 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்து இருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது துணை ஜனாதிபதி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே, இவரின் வெற்றி உறுதியாகி இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் இவர் 64 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஸ்வந்த் சின்காவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 17 எம்பி.க்கள், 125க்கும் மேலான எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் உறுப்பினர்களே அதிகளவில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அசாம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உபி, குஜராத், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மேகாலயா, பீகார் மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் முர்முவை அதிகளவில் ஆதரித்து வாக்களித்துள்ளனர். அசாமில் பாஜ கூட்டணிக்கு 79 எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.

ஆனால், முர்முவுக்கு ஆதரவாக 104 வாக்குகள் விழுந்துள்ளன. முர்முவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என கருதப்பட்ட கேரளாவிலும் கூட, அவருக்கு ஆதரவாக ஒரு எம்எல்ஏ கட்சி மாறி வாக்களித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜ.வுக்கு 69 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், முர்முவுக்கு 71 வாக்குகள் கிடைத்துள்ளன. மேகாலயாவிலும் திரிணாமுல் காங். உறுப்பினர்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில்தான் சின்காவுக்கு  அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆந்திரா, சிக்கிம், நாகலாந்து மாநிலங்களில் அவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

முர்முவுக்கு இவ்வளவு பேர் கட்சி மாறி வாக்களித்து இருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, துணை ஜனாதிபதி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை ஆதரித்து வாக்களிக்கப் போவது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  இதன் காரணமாக, துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாஜ வேட்பாளர் ெஜகதீப் தன்கருக்கு  பெரிய வெற்றி கிடைக்கும் என தெரிகிறது.


அணிவகுப்பு ஒத்திகை: வரும் 25ம் தேதி ஜனாதிபதி பதவியேற்பு விழா  நடைபெறுகிறது. இதையொட்டி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு வீரர்களின்  அணிவகுப்பு ஒத்திகை  இன்று நடக்கிறது. இதனால், இன்றைய தினம் ஜனாதிபதி  மாளிகையில் பாதுகாப்பு பணியில் உள்ள  காவலர்களை பணி மாற்றம் செய்யும்  நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Switch Party , Switch Party Vote in Presidential Election; The opposition parties also suffered setbacks in the vice-presidential elections
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...