கொழும்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்: கூடாரங்களை பிரித்து எறிந்து அகற்றினர்

கொழும்பு: இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி விரட்டியது. அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் தங்கியிருந்த கூடாரங்களை ராணுவத்தினர் பிரித்து ஏறிந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கலவரம் ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் மாளிகை முன் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கினார். இந்த போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையிலும், தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் கூடாரம் அமைத்து தங்கியபடி அவர்கள் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர்ந்து வந்தனர். சமீபத்தில் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டமக்கள், பிரதமர் வீடு, அலுவலகம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கடந்த 9ம் தேதி முற்றுகையிட்டு கைப்பற்றினர்.

நிலைமை மோசமானதால், கோத்தபய தனது குடும்பத்துடன் அதிபர் மாளிகையில் இருந்து தப்பி மாலத்தீவு தப்பினார். அங்கும் மக்கள் அவரை விரட்டி அடிக்கவே, மறுநாள் இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். பின்னர், ஏற்கனவே அறிவித்தப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில், அதிக வாக்குகள் பெற்ற ரணில் வெற்றி பெற்றார். இதன்மூலம், நாட்டின் 9வது அதிபராக நேற்று முன்தினம் அவர் பதவியேற்றார். ஆனால், அவரை உடனடியாக பதவியில் இருந்து விலகும்படி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிபர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை துரத்தும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் நடைபெற்று வரும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தை ஒடுக்குவது குறித்து பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை நடத்தினார்.  

இந்த ஆலோசனை நடைபெற்ற சில மணி நேரங்களில் நாடு முழுவதும் பொது அமைதியை ஏற்படுத்தும்படி ராணுவத்தின் முப்படைகளுக்கும் அதிகாரப்பூர்வமான சிறப்பு உத்தரவை அதிபர் ரணில் பிறப்பித்தார். மேலும்,  `மக்கள் போராட்டத்தை கைவிட்டு அதிபர், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள், பிரதமர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டு, தங்களின் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அரசு கட்டிடங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிபர் என்ற முறையில் அமைதியாக போராட ஒத்துழைப்பேன். ஆனால், அமைதியான போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்,’ என்று எச்சரித்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் காலி முகத்திடலில் களம் இறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு திடீரென சென்ற ராணுவத்தினர் அங்கிருந்த போராட்டகார்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியான தாக்குதல் நடத்தினர். அவர்களின் கூடாரங்களை பிடுங்கி எறிந்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை இழுத்துச் சென்றனர். இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதில், கைதானவர்கள், அதிபர் மாளிகையில் தங்கி இருந்தவர்கள் குறித்த ஆதாரங்களை சிசிடிவி. பதிவு மூலம் திரட்டுவதில் ராணுவம் தீவிரமாக உள்ளது. அதே நேரம், அதிபர் மாளிகை, அலுவலகம் பகுதிளில் இருந்து விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள், ராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து வேறு இடங்களில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால், தலைநகர் கொழும்பு உள்பட இலங்கையின் முக்கிய நகரங்களில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

Related Stories: