இந்தியா - நேபாளம் - திபெத் எல்லையில் 2035ம் ஆண்டுக்குள் 4,61,000 கிலோ மீட்டர் சாலை: சீனாவின் மெகா திட்டம் குறித்த செய்தியால் புதிய சிக்கல்

புதுடெல்லி: இந்தியா - நேபாளம் - திபெத் எல்லையில் வரும் 2035ம் ஆண்டுக்குள் 4,61,000 கி.மீ சாலை அமைக்க சீனாவின் திட்டம் தற்போது வெளியாகி உள்ளதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகையில், சீனாவின் புதிய தேசிய திட்டத்தில் முன்மொழியப்பட்ட 345 கட்டுமான திட்டங்கள் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவின் எல்லையான திபெத்தில் உள்ள லுஞ்ச் கவுண்டியில் இருந்து காஷ்கரில் உள்ள மஜா வரையில்  நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 2035ம் ஆண்டுக்குள் மொத்தம் 4,61,000 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. லுஞ்ச் மாவட்டமானது அருணாச்சல பிரதேசத்தின் இந்தியாவின் பகுதி; ஆனால் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது.

சீனாவின் திட்டத்தின்படி ஜி-695 என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை, கோனா கவுண்டி வழியாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையானது இந்திய - சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) வடக்கில் உள்ளது. கம்பா கவுண்டியானது சிக்கிம் மற்றும் கைரோங் கவுண்டி நேபாள எல்லைக்கு அருகில் உள்ளது. சீனாவால் முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலை திட்டமானது, திபெத், நேபாளம் மற்றும் இந்தியா இடையே அமைந்துள்ள புராங் கவுண்டி மற்றும் நகரி மாகாணத்தில் உள்ள ஜந்தா கவுண்டி வழியாகவும் செல்லும் என்று கூறப்படுகிறதுஇதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘சீன தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை, இயல்பு நிலை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காண தூதரக மற்றும் ராணுவம் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 17ம் தேதி 16வது சுற்று பேச்சுவார்த்தை கார்ப்ஸ் கமாண்டர் நிலையில் நடந்தது. அப்போது மேற்கு பிராந்தியத்தில் எல்ஏசி-யில் உள்ள பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சீனாவின் தற்போதைய நெடுஞ்சாலை திட்டம் குறித்து சீனாவின் அனைத்து செயல்பாடுகளையும் இந்திய அரசாங்கம் கண்காணித்து வருகிறது’ என்று கூறினார். இருந்தும் இந்திய - சீன எல்லையில் சீனா தனது கட்டுமானங்களை அதிகரித்து வருவது குறித்தும் எதிர்கட்சிகள் தொடர்ந்து ஆளும் பாஜக அரசை கண்டித்து வருகிறது. அதற்கேற்றால் போல் சீனாவின் 4,61,000 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தால் எல்லையில் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: