வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன் ஏமாற்றிய சொத்துக்களை மீட்டு தரக்கோரி மகளுடன் மூதாட்டி மனு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : மகன் ஏமாற்றிய சொத்துக்களை மீட்டு தரக்கோரி மகளுடன் மூதாட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அணைக்கட்டு அடுத்த கொல்லைகொட்டாய் கிராமத்தை சேர்ந்த அமராவதி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டிஆர்ஓவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கனவர் நடராஜன். எங்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். நடராஜன் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் என் குடும்ப பூர்வீக விவசாய நிலம் குடியாத்தம் அடுத்த சாரகுப்பத்தில் உள்ளது.

இந்த நிலத்தை மகன், மகள்களுக்கு பிரித்து கொடுத்து விட்டேன். என்னுடைய பாகத்தை இளைய மகன் ரவி என்பவர், பத்திரப்பதிவு செய்வதாக கூறி என்னையும், 3 மகள்களிடம் இருந்து சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். பின்னர் எனது பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். மேலும் என்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டார்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் என்னிடம் இருந்து ஏமாற்றிப்பெற்ற சொத்துக்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகன் தனது பெயருக்கு எழுதிக்கொண்ட பத்திரப்பதிவை ரத்து செய்து சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories: