×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரை மீண்டும் கண்ணாடி கூண்டால் பாதுகாக்க வேண்டும்-பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரை மீண்டும் கண்ணாடி கூண்டு கொண்டு மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வருகிறது தியாகராஜசுவாமி கோயில். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம்,வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும்,2வது பகுதி 4அடி உயரமும்,3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம்,அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடிஅசைந்தாடியபடி நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும்.

இந்நிலையில் இந்த ஆழித்தேர் கடந்த காலங்களில் தகர கொட்டகை கொண்டு மூடப்பட்டு வந்த நிலையில் இந்த ஆழிதேரோட்டத்திற்காக 2 மாதத்திற்கு முன்பு இந்த தகர கொட்டைகை பிரிக்கப்படுவதும், அதன் பின்னர் விழா முடிந்து மீண்டும் தகரம் கொண்டு மூடப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் தகரம் சேதம் காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் இந்த ஆழித்தேர் சேதமடையும் நிலை ஏற்பட்டதை கருதியும், இந்த தேரில் இருந்து வரும் பாரம்பரிய வேலைபாடுகள் கொண்ட மர சிற்பங்களை பாதுகாக்கவும், தேரோட்டம் இல்லாமல் பிற நாட்களில் வெளியூர் பக்தர்கள் இந்த தேரின் அழகை கண்டு களிக்கும் வகையிலும் அரசு சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த ஆழித்தேருக்கு என கண்ணாடி கூண்டுகள் அமைக்கப்பட்டன.

இதனையொட்டி கண்ணாடி கூண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரிக்கப்பட்டு, விழாவிற்கு பின்னர் மீண்டும் அமைக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த விழா முடிந்து 4 மாதங்கள் கடந்த பின்னரும் இந்த கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியானது நடைபெறாமல் ஏதோ பெயரளவில் தகரக் கொட்டகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படும் இந்த தேர் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் மீண்டும் உடனடியாக கண்ணாடி கொண்டு அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur Thyagaraja Swamy Temple , Thirukovilur: Motorists are hampering traffic at Thirukovilur bus station due to the presence of trolley shops.
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில்...