கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்கிக் கொள்வதாக ஐகோர்ட்டில் பெற்றோர் சம்மதம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக ஐகோர்ட்டில் பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். அதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த 3 மருத்துவர்கள் அடக்கிய குழு ஆராய வேண்டும் என உத்தரவிட்டார். மட்டுமல்லாமல், எப்போது உடலை பெற்றுக்கொள்வீர்கள்? என்பதை தெரிவிக்குமாறும், உடற்கூறாய்வு அறிக்கைகளை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து மகளின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், நாளைக்குள் இறுதிச்சடங்கை நடத்த வேண்டும் என தந்தை தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.  

Related Stories: