திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்-அடையாள அட்டை புதுப்பிக்க குவிந்தனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் அடையாள அட்டையை புதுப்பிக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று,  மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதற்காகவும், அடையாள அட்டையை புதுப்பிக்கவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சதவீதத்தின் அடிப்படையில், அரசு உதவிகள், பயண சலுகை, உதவி உபகரணங்கள் மற்றும் நூறு நாள் வேலை திட்டப் பணியில் முழுமையான ஊதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் அவசியமாகியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அடையாள அட்டையை புதுப்பிக்கும் பணிக்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் முகாமில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

அதில், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து பாதிப்பின் சதவீதத்தை மதிப்பிட்டு சான்றுகளை வழங்கினர். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அடையாள ஆவணங்கள் சரிபார்த்தல், பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடந்தன. தகுதியுள்ள நபர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒன்றிய அளவில் முகாம் நடத்த கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை பெறுவதற்காகவும், புதுப்பிக்கவும் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். அதனால், நீண்ட தூரம் பயணம் செய்தல், பல மணி நேரம் காத்திருந்தல், உதவிக்கு ஒருவரை அழைத்து வருதல், அதனால் ஏற்படும் பயணச்செலவு என பல்வேறு வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே, அந்தந்த ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்து, வட்டார அளவிலான மருத்துவர்களை வரவழைத்து மருத்துவ பரிசோதனை சான்று பெறவும், அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: