×

கள்ளக்குறிச்சி அருகே தண்டோரா மூலம் எச்சரிக்கை: பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைத்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது கொண்டு செல்லப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், டேபிள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை பள்ளி வளாகத்தில் மக்கள் வீசிவிட்டுச் சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரின் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலி, ஏசி இயந்திரங்கள், கணினி, பிரிண்டர்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட, கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சென்றனர்.

இந்நிலையில், கலவரத்தின் போது, மக்கள் எடுத்துச் சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்குமாறும், இல்லாவிட்டால், பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை என, பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில், கிராம நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமமக்கள், பள்ளியில் இருந்து எடுத்துசென்ற பொருட்களை, கனியாமூர் கும்பக்கோட்டாய் மாரியம்மன் கோயில் வளாகத்தில் போட்டுவிட்டுச் சென்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மேஜைகள், இரும்புக் கம்பிகள், கிரைண்டர்கள், சமையல் பாத்திரங்கள், குடிநீர் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை பொதுமக்கள் இரவோடு இரவாக வீசிச்சென்றனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், டேபிள், சேர்களை போட்டுவிட்டுச் சென்ற கோயில் வளாகத்தில் போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமன்றி சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சுமார் 16 நகை செட்டுகளை, சின்னசேலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில், இரவு நேரங்களில் இதுபோன்ற பொருட்களை ஒப்படைத்தனர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.       


Tags : Tandora ,Kathakaruchi , Kallakurichi, Tandora, Warning, School, Handover, Public
× RELATED அறிவியல், தொழில் நுட்பம் வளர்ந்து...