×

பிரிந்து சென்ற மாவட்டங்களுக்குள் அடங்கிய சுற்றுலா தலங்கள் பொழுதுபோக்க எந்த வாய்ப்பும் இன்றி ஓரங்கட்டப்பட்ட வேலூர் மக்கள்

*பெரியார் பூங்காவை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்

*ராஜாதோப்பு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும்

வேலூர் : அண்டை மாவட்டங்களில் மக்கள் பொழுது போக்கும் வகையிலான பூங்காக்கள் உட்பட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் இருக்கும் நிலையில், அதுபோன்று எந்த பொழுதுபோக்கும் அம்சங்களும் இன்றி வேலூர் மாவட்ட மக்கள் ஏக்க பெருமூச்சு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பிரிக்கப்படாத பழைய வடாற்காடு மாவட்டத்தில் இருந்து 1989ம் ஆண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது அம்மாவட்டத்தில் மிகப்பெரிய ஆன்மீக தலமான அண்ணாமலையார் கோயிலும், சாத்தனூர் அணையும், ஜம்னாமரத்தூர் மலை வாசஸ்தலமும் இணைந்தது. அதை தொடர்ந்து 2019ம் ஆண்டு வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.

அப்படி பிரிக்கப்பட்டபோது ஏழைகளின் ஊட்டியென கருதப்படும் ஏலகிரியும், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் அணை என உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட மற்றும் அண்டை மாநில மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சென்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டமும், ராணிப்பேட்டை மாவட்டமும் மக்களின் பொழுதுபோக்குவதற்கும், சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கும் உகந்த இடங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட மாவட்டங்களாக மாறின.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டையில் நகர மக்கள் பொழுது போக்கி மகிழும் வகையில் அங்குள்ள 21 ஏக்கர் பரப்பளவுள்ள பிஞ்சி ஏரியை மேம்படுத்தும் பணியை ₹42 கோடியில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி பிஞ்சி ஏரியில் உல்லாச படகு சவாரி, ஏரியை சுற்றி வரும் பாதை, பூங்கா, மீன் வளர்ப்பு, மேம்பாலத்தில் இருந்து ஏரியின் எழிலை கண்டுகளிக்கும் வகையில் பார்வையாளர் மாடம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

அதேநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரில் மட்டும் உள்ளூர் மக்களை தவிர மருத்துவம், கல்வி, ஆன்மீக, பணிவாய்ப்பு என வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களில் 50 முதல் 70 ஆயிரமாக உள்ளது. இதுவே விடுமுறை நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

இவ்வாறு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் குடும்பத்துடன் வந்து பொழுது போக்கி செல்ல தகுந்த இடங்களாக அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா, வேலூர் கோட்டையும், அதனுடன் இணைந்த கோட்டைவெளி பூங்காவும் மட்டுமே உள்ளது. இதை தவிர்த்து நகரில் ஜலகண்டேஸ்வரர் கோயில், பொற்கோயில் ஆகியன வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களை ஈர்க்கும் இடங்களாக உள்ளன.

இம்மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி தாலுகாவில் ராஜாதோப்பு அணை, குடியாத்தம் தாலுகாவில் மோர்தானா அணை என இரண்டு அணைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இதில் ராஜாதோப்பு அணைப்பகுதி பூங்காவோடு இணைந்தது. இந்த பூங்காவும் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

அதேபோல் மோர்தானா அணையின் முன்பகுதியில் பொறியாளர், பணியாளர் குடியிருப்புகளுடன் கூடிய பல ஏக்கர் பரப்பளவுள்ள காலியிடம் அப்படியே விடப்பட்டுள்ளதால் அதுவும் புதர்கள் மண்டி மர்மதேசமாக மாறியுள்ளது.இதுதவிர வேலூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள வேலூர் மாநகராட்சி பெரியார் ஈவேரா பூங்காவும் கைவிடப்பட்ட நிலையில் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இப்பூங்கா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்கு பராமரிக்கப்பட்டு ஊட்டியில் அமைந்துள்ள பூங்காவுக்கு ஈடான பொலிவுடன், சிறுவர் ரயில், அலங்கார நீரூற்றுகள், விசேஷமான தாவர வகைகள், பூஞ்செடிகள், பொம்மைகள், சிறுவர் ரயில் நுழைந்து செல்லும் குகை பாதை, பறவைகள், மான்களுடன் கூடிய சிறுவர்கள் விளையாடும் அம்சங்களுடன் கூடிய சிறுஉயிரியல் பூங்கா என இருந்தது. மாலை நேரங்களில் இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுது போக்கி செல்வர். அதோடு செய்திகளை கேட்பதற்காக ரேடியோ ஒலிபரப்பு வசதியும், கூடைப்பந்து மைதானமும் இப்பூங்காவில் இருந்தது.

அதன் பிறகு கைவிடப்பட்ட இப்பூங்கா பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு பின்னர் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கைவிடப்பட்ட நிலையில் கூடைப்பந்து மைதானத்தில் மட்டும் சில இளைஞர்கள் தொடர்ந்து வந்து விளையாடி செல்கின்றனர். அதேபோல் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மாவட்ட நிர்வாகத்தால் வேலூர் கோட்டை பூங்காவை இரவிலும் கண்டுரசிக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகளுடன், அமிர்தி, பாலமதி, ஏலகிரி என பல பெயர்களில் உல்லாச படகுகள் கோட்டை அகழியில் வலம் வந்தன.

ஆரம்பத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உல்லாச படகு சவாரி இருந்த நிலையில் பின்னர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பிறகு படகுகள் என்ன ஆனது என்பது கேள்விக்குறி.
இதன் மூலம் எவ்வித பொழுதுபோக்குவதற்கான எவ்வித வாய்ப்பும் இன்றி தவித்து வருவதாக வேலூர் மாநகர மக்கள் மட்டுமின்றி மாவட்ட மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, வேலூரில் இருந்து பிரிந்த மாவட்டங்களை போன்று வேலூர் மாவட்டத்திலும், வேலூர் நகரிலும் இருந்தும் இல்லாமல் இருக்கும் பெரியார் ஈவேரா பூங்காவை பழைய நிலைக்கு திரும்ப செய்வதுடன், கோட்டை அகழியில் உல்லாச படகு சவாரி, கோட்டைவெளியில் இருபுறமும் அமைந்த பூங்காவில் கூடுதல் அம்சங்கள் என மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மோர்தானா அணைப்பகுதியில் பூங்காக்களை ஏற்படுத்த வேண்டும். ராஜாதோப்பு அணை பூங்காவை சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மாவட்ட மக்களும், நகர மக்களும் அரசுக்கு வைத்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்

வேலூர் நகரில் ₹1,000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் வேலூர் கோட்டையை அழகுப்படுத்துதல் பணி ₹32 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் அகழியை தூர்வாருதல், மின்விளக்கு ஒளி, ஒலி அமைப்பு, கோட்டைக்குள் சுற்றி வர பிளாட்பாரங்களுடன் கூடிய ஸ்மார்ட் சாலை, அலங்கார வீதிவிளக்குகள், சுற்றுலா பயணிகள் அமர்வதற்கான கிரானைட் இருக்கைகள், கேன்டீன் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அகழி தூர்வாருதல், பிளாட்பாரங்களுடன் கூடிய சாலைகள் உட்பட பல பணிகள் முடிந்துள்ளன. மின் ஒளி, ஒலி அமைப்புகள், இரவிலும் கோட்டையை மிளிர செய்யும் மின்விளக்கு பணிகள், கேன்டீன் என பல்வேறு பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கோடை விழாவுக்கு ஏற்ற அரவட்லா மலை கிராமம் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில் பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தின் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.

அதை மீண்டும் கையில் எடுத்து பூர்த்தி செய்யும்போது, அங்கு கோடை விழாவையும் நடத்த முடியும். இதன் மூலம் வேலூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சிறந்த சுற்றுலா தலமாக மாறும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Tags : Vellore , Vellore: Neighboring districts have tourist attractions including recreational parks
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...