×

ராசிபுரம், மல்லசமுத்திரத்தில் 8,368 மூட்டை பருத்தி ₹2.65 கோடிக்கு ஏலம்

மல்லசமுத்திரம் : ராசிபுரம், மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று 8,368 மூட்டை பருத்தி, ₹2.65 கோடிக்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 873 விவசாயிகள் 5,026 மூட்டைகளை (182 டன்) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹7,860 முதல் ₹9,125 வரையும், பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹8,761 முதல் ₹9,426 வரையும், கொட்டு பருத்தி குவிண்டால் ₹5,100 முதல் ₹6,995 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 5,026 மூட்டை பருத்தி ₹1.61 கோடிக்கு ஏலம் போனது.

அதேபோல், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆர்.கவுண்டம்பாளையம் கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,342 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் பருத்தி குவிண்டால் ₹8019 முதல் ₹9529 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹8,211 முதல் ₹9,490 வரையும், கொட்டு பருத்தி குவிண்டால் ₹5,100 முதல் ₹6,800 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 3,342 பருத்தி மூட்டைகள் ₹1.04 கோடிக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Rasipuram ,Mallasamudra , Mallasamuthram: Rasipuram, Mallasamuthram Agricultural Producers Cooperative Sales Society yesterday sold 8,368 bales of cotton for ₹2.65 crore.
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து