×

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் ராணுவம் திடீர் தாக்குதல் : கூடாரங்கள் இடிப்பு; அமைதியைப் பேண முப்படைக்கு உத்தரவு!!

கொழும்பு : இலங்கையில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் காலே முகத்திடலில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடியாக நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி இளைஞர்களை இழுத்துச் சென்றுள்ள நிகழ்வு கொழும்புவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அதிபராக பதவி ஏற்றதும் முதல் பணியாக நேற்று பாதுகாப்புத் துறை தலைமை செயலகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசுக்கு எதிராக காலே முகத்திடலில் நடைபெற்று வரும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தை ஒடுக்குவது குறித்து பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை நடைபெற்ற சில மணி நேரங்களில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கு அதிகாரப்பூர்வமான சிறப்பு உத்தரவை அதிபர் ரணில் பிறப்பித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்து இருந்தார். இதையடுத்து நேற்று நள்ளிரவு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் காலே முகத்திடலில் களம் இறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலே போராட்டக்களத்திற்குள் நுழைந்த இலங்கை பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களின் கூடாரங்களை பிடுங்கி எறிந்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அவர்களை இழுத்துச் சென்றனர். தாக்குதல்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீதும் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.


Tags : sri lanka , Sri Lanka, Protesters, Army, Attack
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு