×

2022-23ம் ஆண்டிற்குரிய செந்தர விலை விவர பட்டியல்: அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டிடங்களின் 2022-23ம் ஆண்டுக்கான மதிப்பீடு தயார் செய்வதற்குரிய, கட்டுமான பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தினக்கூலி விவரம் அடங்கிய செந்தர விலை விவர பட்டியலை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருட்களின் விலைகளை பகுப்பாய்வு செய்த பிறகு பல்வேறு பொருட்களின் விலைப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அத்தகைய ஆவண விகிதங்கள்தான் செந்தர விலைப்பட்டியல் என அழைக்கப்படுகிறது. மாநில அரசால் தயாரிக்கப்படும் இந்த செந்தர விலைப்பட்டியல் மதிப்பீட்டை தயாரிப்பதிலும், ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தில் விலையை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  பொருட்களின் சந்தை விலை, தொழிலாளர் ஊதியம், வண்டி செலவு போன்றவற்றில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் செந்தர விலைப்பட்டியல் நிதியாண்டின் அடிப்படையில் வெளியிடப்படும்.

சுமார் 2500க்கும் மேற்பட்ட பொருட்களின் அடிப்படை விலைகள், வேலையாட்கள் மற்றும் வண்டிகள் முதலியன பல்வேறு துணைத் தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட சுமார் 300 உருப்படிகளின் முடிக்கப்பட்ட விலைகள் உள்ளன. செந்தர விலைப்பட்டியலில் சிவில் வேலைகள் மற்றும் மின் இயந்திர வேலைகள் இரண்டும் உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் பி.ஆர்.குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநிலம் முழுவதும் ஒரே விலைப்பட்டியல்
1999ம் ஆண்டு வரை செந்தர விலைப்பட்டியல் மாவட்ட அளவில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளரால் தயாரிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. 1999ம் ஆண்டு முதல் செந்தர விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய, பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், பொதுப்பணித்துறை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி தலைமை பொறியாளர், நிதித்துறையின் பிரதிநிதி, நெடுஞ்சாலை முதன்மை இயக்குனர், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அப்போது முதல் மாநிலம் முழுவதும் ஒரே செந்தரப்படியல் தான் கடைபிடிக்கப்படுகிறது.

Tags : Sendara ,Minister ,A. Etb Velu , Price list, Minister AV Velu
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...