×

தொடர் மழையால் நிரம்பி வழியும் சிட்ரபாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை:   ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆந்திர மாநிலத்தில், பிச்சாட்டூர் கிராமத்தில்  மிகப்பெரிய ஏரி உள்ளது.  இந்த ஏரியில் மழை காலங்களில் மழைநீர் நிரம்பியதும், தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி,  ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை  சேமித்து வைக்க, ஊத்துக்கோட்டை  பேரூராட்சி  பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே  தடுப்பணை கட்ட வேண்டும்.  

மேலும் ஊத்துக்கோட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளான  சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் விளைவித்து வருகின்றனர். இவர்களின் நீர் ஆதாரத்திற்காக சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி  கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி  ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.

இதனால், அப்பகுதி விவசாயிகளும் பயனடைந்தனர்,  நாளடைவில் இந்த தடுப்பணை  மழையால் சேதமடைந்தது,  இதை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர், கடந்த 2014 - 2015ம் ஆண்டு ரூ. 3.42 கோடி செலவில் சிட்ரபாக்கம் பகுதியில்  தடுப்பணையையும், கரைகளையும் பொதுப்பணித்துறையினர் புதுப்பித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியிலிருந்து வரும் மழை நீர், சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு  வந்து பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அடங்கிய சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது.

இதனால், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒரு சிலர் தடுப்பனையின் ஆழம் தெரியாமலும், ஆபத்தை உணராமலும் குளித்து மகிழ்கின்றனர்.  இதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Chitrapakkam , Continuous rains, Chitrapakkam barrage, farmers happy
× RELATED நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம்...