×

சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிகிறது. சில நேரங்களில் சாலைகளில் படுத்து கொள்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நடக்கிறது. இதனால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் கட்டி முறையாக பராமரிக்காமல் அவிழ்த்து விடுவதால்தான் இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக சுற்றவிடும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், வட்டாட்சியர், இன்ஸ்பெக்டர் மற்றும் கால்நடை பராமிரிப்பு துறை அலுவலர்கள் பஞ்சாயத்து அலுவலர்களுடன் இணைந்து தணிக்கை செய்து தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, சாலை பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் கால்நடைகளின் உரிமையாளர் மீது சட்டப்படி வழக்குகள் பதியப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvallur , Cattle owners fined, Tiruvallur Collector warned
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...