×

திருவொற்றியூரில் வாயுகசிவு காரணம் அறிய 5 வல்லுநர்களை கொண்ட தொழில்நுட்ப குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மணலி மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் வாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் கட்டுப்படுத்துவற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த 5 வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்ப குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மற்றும் மணலி தொழிற்சாலைப் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்பிஜி மணம் போல் துர்நாற்ற வாயு கசிவு உணரப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இதனைத் தொடந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் இப்பகுதிகளில் பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்நேர்வில் உடனடியாக மேற்படி வாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த பின்வரும் வல்லுநர்களை கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழு அமைத்து உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

 அதன்படி அக்குழுவில்  விஞ்ஞானி-இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர்கள் கோகுல் மற்றும் சிவதாணு பிள்ளை, சென்னை, விஞ்ஞானி-இ, மண்டல இயக்குநர், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் டாக்டர் எச்.டி.வரலட்சுமி, மெட்ராஸ், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள ஆதார பொறியியல், கட்டட பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.சிவ நாகேந்திரா, சென்னை, அண்ணாபல்கலைக்கழகம், வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர்.என்.பாலசுப்பிரமணியன் இந்த தொழில்நுட்பக் குழு உடனடியாக மணலி மற்றும் திருவொற்றியூர் தொழிற்பகுதிகளில் ஆய்வு செய்து தனது அறிக்கையினை இரண்டு நாட்களில் அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tiruvottiyur ,Tamil Nadu Govt , Formation of a technical committee of 5 experts to find out the cause of gas leakage in Tiruvottiyur: Tamil Nadu Govt
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...