தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட சரபோஜி மன்னர் அரியவகை ஓவியம் அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மூலம் விற்றது அம்பலம்

சென்னை: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து திருடப்பட்ட சரபோஜி மன்னரின் அரியவகை ஓவியத்தை அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ராஜா சரபோஜி மற்றும் அவரது மகன் சிவாஜி ஆகியோரின் அரியவகை ஓவியம் காணாமல் போனதாக ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்தார். புகாரின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ரவி மேற்பார்வையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சரபோஜி ராஜாக்களில் கடைசியாக இருந்தவர். தஞ்சை வரலாற்று தகவலின்படி 1815 முதல் 1827 வரையிலான காலக்கட்டத்தில் சரபோஜி மன்னர் மற்றும் அவரது மகன் சிவாஜி ஆகியோரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மன்னர் சரபோஜி 1832ம் ஆண்டு இறந்தார். அவரது ஒரே மகன் சிவாஜி 1855 வரை ஆட்சி செய்தார். அதன் பிறகு மன்னரின் அரிய வகை ஓவியம் தஞ்சை சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டது. 1918ம் ஆண்டு சரஸ்வதி மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஓவியம் மாயமானது.

இந்தியாவில் இந்த ஓவியத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் செய்து வெற்றி பெறவில்லை. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வெளிநாடுகளில் உள்ள பழங்கால சேகரிப்பாளர்களின் அருங்காட்சியகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் தேடுதல் பணி நடந்தது. அப்போது அமெரிக்காவில் உள்ள பிபாடி எசெக்ஸ் அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் இருந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், கடந்த 2006ல் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்திய அருங்காட்சியகத்தில் இருந்து இந்த அரியவகை ஓவியத்தை அந்த அருங்காட்சியகம் வாங்கியது உறுதியானது.

மேலும், சுபாஷ் கபூர் தனது காதலி செலினா முகமது கடந்த 1969ம் ஆண்டு ஐரோப்பிய பழங்கால சேகரிப்பிலிருந்து வாங்கியதாக போலி கடிதத்தை தயாரித்து அந்த அருங்காட்சியகத்திற்கு சரபோஜி மன்னரின் ஓவியத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. சுபாஷ் கபூர் கைதுக்கு பிறகு இந்த ஓவியத்தை கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்படைக்க தயாராக இருந்தும், அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர யாரும் முயற்சி செய்யவில்லை. எனவே இந்த ஓவியத்தை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: