சின்னசேலம் மாணவி உயிரிழந்த விவகாரம் பள்ளியில் அனுமதியின்றி விடுதி நடத்தியது குற்றம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததையடுத்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கல்வி அலுவலர் சிவராமன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா  ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.   

பின்னர் ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில், மாவட்ட ஆட்சியர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு கொடுத்திருந்தார். ஆனால் கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனுமதியின்றி விடுதி நடத்தியது தெரியவந்தது. இந்த விடுதியில் அனுமதி பெறாமல் 24 மாணவர்களை தங்க வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. முறையாக விதிகளை கடைப்பிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். அனுமதி பெறாமல் விடுதி நடத்துவது தண்டனைக்குரிய குற்றம். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து வருகின்ற 27ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் விசாரணை நடைபெறும் என்றார்.

Related Stories: