சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியை உலக வங்கி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு: நீர் மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020 மற்றும் 2021 - ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிகளவில் பெய்ததால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து நீர் நிலைகளை மேம்படுத்துதல், சோழவரத்திலிருந்து செங்குன்றம் வரை பைப் லைன் அமைத்தல் மற்றும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உலக வங்கியிடம் நிதி கேட்டதாக கூறப்படுகிறது. தற்போது 3.23 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருப்பதால் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் உயர்த்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற் பொறயாளர் கோபாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள்களை ஆய்வு செய்தனர். மேலும் ஏரி ஏற்கனவே 35 அடி உயரம் உள்ளதை மேலும் இரண்டடி உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதே போல் நேற்று உலக வங்கி பிரதிநிதிகள் சூபே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தலைமைப் பொறியாளர்கள் முரளிதரன், பொன்ராஜ், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உலக வங்கி பிரதிநிதிகளுடன் சென்று நீர் நிலைகள் குறித்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து சைலம் வழியாக கண்டலேறு வந்தடைகிறது. அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. மொத்தம் 406 கி.மீ. தூரம் கால்வாய் மூலம் இந்த தண்ணீர் கொண்டு வரப்படுகிறது என்ற விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உலக வங்கி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

அதே போல் ஆந்திர மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்வதால் அங்குள்ள அம்மம்பள்ளி அணை நிரம்பியதும் அங்கிருந்து திறந்துவிடப்படும் நீரும் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது.

அதே போல் கூவம் ஆற்றிலிருந்தும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவது குறித்தும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர் ஆதாரங்கள் குறித்தும் உலக வங்கி பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

பூண்டி நீர்த்தேக்கத்தை மேலும் இரண்டு அடி உயர்த்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா எனவும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை உயர்த்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததையடுத்து அவர்கள் தரும் அறிக்கையை அடுத்து நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்யும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: