‘கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டு கொன்று விடுவேன்’ ரூ.2 கோடி நிலத்தை அபகரித்து ஓபிஎஸ் தம்பி கொலை மிரட்டல்: தேனி எஸ்பி அலுவலகத்தில் முதியவர் பரபரப்பு புகார்

தேனி: ஓபிஎஸ் தம்பி ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி அபகரித்ததாக தேனி எஸ்பி அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி, ஜெயந்தி நகரை சேர்ந்தவர் முனியாண்டி(60). இவர் நேற்று தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜா மீது மோசடி புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: நான் வடுகபட்டியில் சாக்கு வியாபாரம் செய்து வருகிறேன். எனது மனைவி சந்தானலட்சுமிக்கு சொந்தமாக கொடைக்கானல் வட்டம், வில்பட்டியில் 1.83 ஏக்கர் பேரித்தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தை எங்கள் மகளின் திருமண செலவிற்காக விற்பனை செய்ய முடிவு செய்தோம். கடந்த 2010ல் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தான் கிரையம் பெற்றுக்கொள்வதாக கூறினார். அப்போது நிலத்திற்கு ரூ.40 லட்சம் கிரையம் பேசப்பட்டது.

அப்போது ஓ.ராஜா, நிலத்தை கிருஷ்ணன் பெயரில் பவர் பத்திரம் எழுதி தாருங்கள். பணத்தை தந்து விடுகிறேன் என கூறினார். அவரின் பேச்சை நம்பி பொது அதிகார பத்திரத்தை கிருஷ்ணன் பெயரில் எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு பேசியபடி பணத்தை ஓ.ராஜா தரவில்லை. பணத்தை கேட்டு சென்றபோது, பணம் கேட்டால், உன்னை கிணற்றில் தலைகீழாக தொங்கவிட்டு கொன்று விடுவேன் என மிரட்டினார். இதனால் பொது அதிகார பத்திரத்தை ரத்து செய்ய முயற்சித்தேன். அதற்குள்ளாக எனது மனைவியின் நிலத்தை பெரியகுளம் தென்கரையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்து, என்னை ஓ.ராஜா மற்றும் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து கடந்த 2011, அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து முறையிட்டேன். அப்போது, பணத்தை பெற்றுத் தருவதாக ஜெயலலிதாவும் கூறினார். ஆனால் எனக்கு பணம் கிடைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் ஓ.ராஜா இருந்ததால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, விஜயகுமாருக்கு கிரையம் முடித்த நிலத்திற்கு எனது ஒப்புதல் கேட்டு கடந்த ஒரு வாரமாக ஓ.ராஜா தரப்பினர் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் புகார் அளிக்க வந்தேன். ரூ.40 லட்சத்திற்கு வாங்கிக் கொள்வதாக சொன்ன இந்த நிலத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ.2 கோடி வரை உள்ளது. எனவே, மாவட்ட போலீஸ் நிர்வாகம் எனது நிலத்தை மீட்டு தருவதோடு, எனக்கும், எனது மனைவியின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மீது முதியவர் அளித்துள்ள மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: