உணவு பாதுகாப்பு சட்டம் அமலில் இருந்தும் பட்டினியால் மக்கள் சாவு: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: நாட்டில் தேசிய உணவு பாதுகப்பு சட்டம் அமலில் இருந்தும் மக்கள் பசியால் உயிரிழக்கின்றனர் என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியாவை உருவாக்குவதில் புலம் பெயர் தொழிலாளர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். நிறைய கிராமங்களில் தற்பொழுதும் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு மக்கள் உறங்கச் செல்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயிகளும், புலம்பெயர் தொழிலாளர்களும் மிகவும் முக்கியமானவர்கள். அதனால் அவர்களை எளிதாக புறம்தள்ளி விட முடியாது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு தாகம் எடுக்கிறது என்றால் அவர் கிணற்றை நோக்கி செல்லக் கூடாது. கிணறு அவர் அருகில் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரத்தின் காரணமாகதான் அவர்களுக்கான உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒவ்வொரு மாநில அரசுகளும் ரேஷன் அட்டைகள் முறையாக பதிவு செய்யப்படுவது, அவர்களுக்கு உணவு பொருட்கள் முறையாக சென்று சேர்வது போன்றவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நாட்டில் ஒரு நபர் கூட உணவில்லாமல் உயிரிழந்தார் என்ற நிலை ஏற்படாமல் தடுப்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நமது நாட்டில் அமலில் இருந்தாலும் மக்கள் பசி கொடுமையால் இறப்பது வேதனையானது. பசி கொடுமையால் யாரும் உயிரிழக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இரண்டு வாரம் கழித்து இன்னும் சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: