×

பசுபதி குமார் பராசுக்கு மக்களவை கட்சி தலைவர் பதவி அளித்தது தவறு: சபாநாயகருக்கு சிராக் பஸ்வான் கடிதம்

பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு லோக் ஜனசக்தி கட்சிக்கு, அவருடைய மகன் சிராக் பஸ்வான் தலைவரானார். பீகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ. கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட்டார். இதில், இக்கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, கட்சியில் அவருடைய பிடி படிப்படியாக தளர்ந்து வந்தது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் தம்பி பசுபதி குமார் பராஸ் தலைமையில் லோக் ஜனசக்தியின் 5 எம்பிக்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் மக்களவை சபாநாயகரிடம், தங்களை தனிக்குழுவாக அறிவித்து, தங்களின் தலைவராக பசுபதி குமார் பராஸை அறிவிக்க வேண்டும் என மனு அளித்தனர். அதன்படி, சிராக் பஸ்வானிடம் இருந்து கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டு, பசுபதி குமார் நாடாளுமன்ற கட்சித் தலைவரானார். அதைத் தொடர்ந்து அதிருப்தி எம்பிக்கள் கூடி, கட்சி தலைவர் பதவியில் இருந்து சிராக் பஸ்வானை நீக்கி இருப்பதாக டிவிட்டரில் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் சிராக் பஸ்வான் கட்சியின் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டினார். இதில், பராஸ் உட்பட அதிருப்தி எம்பிக்கள் 5 பேர் நீக்கப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், சிராக் பஸ்வான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீகார் தேர்தலில்  எங்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு கிடைத்தது. எங்களுக்கு ஆறு சதவீத வாக்குகள்  கிடைத்தன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் எங்கள் கட்சியை உடைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வந்தன.  பாதுகாப்பான இடத்தில் இருக்க சிலர் விரும்புகிறார்கள். சித்தப்பா (பராஸ்) போதுமான முயற்சி செய்யவில்லை. எங்கள் கட்சியில் என்ன நடக்கிறது என்பது உள்கட்சி விவகாரம். இதில், மற்றவர்கள் தலையிட முடியாது,’’ என்றார். அதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சிராக் பாஸ்வான் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்களவையில் எங்கள் கட்சியின் தலைவர் யார் என்பதை கட்சியின் உயர்நிலை குழுதான் முடிவு செய்யும். எனவே, லோக் ஜனசக்தியின் மக்களவை கட்சியின் தலைவராக பசுபதி குமார் பராஸ் எம்பி.யை தாங்கள் நியமித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது,’ என்று கூறியுள்ளார்….

The post பசுபதி குமார் பராசுக்கு மக்களவை கட்சி தலைவர் பதவி அளித்தது தவறு: சபாநாயகருக்கு சிராக் பஸ்வான் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Pashupati Kumar Paras ,Chirag Baswan ,Patna ,Union Minister ,Ram Vilas Paswan ,Lok Janashakti Party ,Chirag Paswan ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...