அரசு மேல்நிலைப்பள்ளியின் 2வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

மாமல்லபுரம்: அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாமல்லபுரம் அருகே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் சுனாமி நகரை சேர்ந்த மீனவர் சுரேஷ். இவரது மகள் கஜ சுபமித்ரா (14), இவர், பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் தமிழ் இரண்டாம் பருவநிலை தேர்வு நடந்தது. அப்போது, மாணவி கையில் பிட் பேப்பரை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாகவும், இதை பார்த்த ஆசிரியை மாணவியை கண்டித்து, பெற்றோரிடம் இதுபற்றி கூறிவிடுவேன் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக, அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதியிடம் வாக்குமூலம்

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி கஜ சுபமித்ராவிடம், செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார். அப்போது, ‘கடந்த வாரம் ஆசிரியை அடித்தார். நேற்று தமிழ் இரண்டாம் பருவ தேர்வின்போது, சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன்’ எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெற்றோர் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள், மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: