×

செங்கல்பட்டு அருகே உணவு கிடைக்காமல் நெற்பயிர்களை நாசப்படுத்தும் மயில்கள்: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உணவு கிடைக்காமல் நெற்பயிர்களை மயில்கள் நாசப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அதிகளவில்  மலைகளும் ஏரிகளும் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் பெருமளவில் விவசாயம் நிறைந்து பசுமை சூழலில் காணப்படும் பகுதிகளாக விளங்குகிறது. இங்கு வயல்களை சுற்றி மலைகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிறைய காடுகள் உள்ளன.

அதிலும், குறிப்பாக செங்கல்பட்டு அடுத்த பெரு தண்டலம் பகுதி, திருப்போரூர் கூட்ரோடு முதல் திருப்போரூர் வரை சாலையின் இருபுறமும் அதை சுற்றியுள்ள நிறைய கிராமங்களிலும் மரங்கள் அடர்த்தியாக உள்ள காடுகள் நிறைந்துள்ளன. இந்த காட்டுப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் மான் மற்றும் காட்டு முயல்கள், முள்ளம்பன்றி,   மயில்கள் அதிக அளவில் வாழ்ந்து  வருகின்றன. காட்டுக்குள்  இவைகளுக்கு போதுமான இரையோ, குடிதண்ணீரோ கிடைக்காத சூழ்நிலையில் காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் கம்பு, மக்காசோளம், சோளம், கேழ்வரகு, காராமணி உளுந்து உள்ளிட்ட பயிர்களை மேய்ந்து நாசம் செய்வதாகவும், இதனால் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் மூன்று போகத்தில் இரண்டு போகம் பயிற்செய்யாமலே கரம்பாக போட்டுவிடுவதாகவும்  விவசாயிகள் வேதனை படுகின்றனர்.

மயில்கள் தேசிய பறவை என்பதால் மயில்களை பிடிக்கவோ அல்லது அதை கொல்லவோ மனம் வரவில்லை என்றும் சில விஷமிகள் வெளியூரிலிருந்து வந்து  மயிலை பொறிவைத்து பிடித்து கள்ள மார்கெட்டில் இறைச்சிக்காக  விற்கின்றனர் என  விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. மயில்களுக்கு காட்டுக்குள் போதுமான உணவோ தண்ணீரோ கிடைத்தால் காட்டைவிட்டு ஊருக்குள் இடம்பெயர வாய்ப்பில்லை. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்யவேண்டும். மேலும், இப்பகுதியில் வண்ண வண்ண ஆண், பெண் மயில்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வருவதால் அவற்றினை பார்க்க வெளியூர்களிலிருந்து  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து ஆர்வமாக பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chengalpattu , Bricks, non-availability of food, peacocks, farmers suffering
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!