×

காஞ்சிபுரம் அருகே பாலாற்று பாலத்தில் மண் குவியல்கள்: விபத்துகள் தொடர்வதால் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாலாற்று பாலத்தின் இருபுறமும் மண் குவியல் குவிந்து கிடப்படதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால், இந்த மண் குவியல்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தையொட்டி செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஓரிக்கைகீழ் மற்றும் செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் செவிலிமேடு மேல் ஆகிய பகுதிகளில் தலா ஒரு கிமீ நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலை வழியாக திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து, கார் போன்ற வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. மேலும் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்களும், புஞ்சைஅரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம், கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நெசவாளர்கள், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு காஞ்சிபுரத்தை நம்பி இருப்பதாலும் அதிகளவில் டூவீலர்களில் பாலங்கள் வழியாக சென்று வருகின்றன. மாங்கால் கூட்டு சாலையில் உள்ள சிப்காட்டில் பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் உள்ளதால், இங்கு ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு முக்கிய பாலமாக விளங்குகிறது. எம்-சாண்ட் மற்றும் லாரிகளில் மணல் ஏற்றி செல்வதால் பாலத்தின் இருபுறமும் மண் குவிந்து கிடக்கிறது. பாலத்தில் எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட பைக்கில் வருவோர் ஒதுங்கும்போதும் மண்ணில் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பாலற்று பாலத்தின் இருபுறமும் உள்ள மண் குவியல்களை அகற்றி அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கான்கிரீட் பெயர்ந்த பாலம் பாலத்தில் சில இடங்களில்  கான்கிரீட் பெயர்ந்து,
அச்சுறுத்தும் வகையில் இரும்பு கம்பிகள் வெளியே  நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதனால், டூவீலரில் செல்வோர் அச்சத்துடன் பாலத்தை  கடந்து செல்கின்றனர். இரவு வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவோர்  பாலத்தை கடக்கும்வரை உயிரை கையில் பிடித்து செல்லவேண்டிய நிலையுள்ளது.

Tags : Palatu Bridge ,Kanchipuram , Bridge, mud piles, accidents
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...