×

சீனாவின் மிரட்டலுக்கு பணிய மறுப்பு தைவானுக்கு போயே தீருவேன் சபாநாயகர் பெலோசி பிடிவாதம்: அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை

வாஷிங்டன்: சீனாவின் மிரட்டலையும் மீறி, தைவானுக்கு செல்வதில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி உறுதியாக இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது. தைவான் நாட்டை மீண்டும் தனது நாட்டுடன் இணைப்பதில் சீன அதிபர் ஜின்பிங் தீவிரமாக இருக்கிறார். அதை தடுப்பதில் அமெரிக்க அதிபர் பைடனும் தீவிரமாக உள்ளார். இதற்காக தேவைப்பட்டால் ராணுவ ரீதியாக மோதவும் இருவரும் தயாராக உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த ஏப்ரலில் தைவான் செல்ல இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த பயணம் ரத்தானது.  சமீபத்தில், அடுத்த மாதம் அவர் தைவான் செல்வதாக தகவல் வெளியானது. இதை கண்டித்த சீனா, `பெலோசி தைவான் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று எச்சரித்துள்ளது. இருப்பினும், தைவானுக்கு செல்வதில் பெலோசி பிடிவாதமாக இருக்கிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் நேற்று அளித்த பேட்டியில், `தற்போதைய சூழலில், பெலோசி தைவான் செல்வது நல்லதல்ல என்று ராணுவம் எச்சரித்துள்ளது,’ என்று தெரிவித்தார். தைவானுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க எம்பி.யான நியூட் ஜின்கிரிச் சென்று வந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது பெலோசி அங்கு செல்வதில் உறுதியாக இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் பைடன் (79) ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி, 2 பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு உள்ள அவர், வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


Tags : Speaker ,Pelosi ,Taiwan ,China ,US military , China's threat, Speaker Pelosi's stubbornness, US military on alert
× RELATED தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...