×

“கொலை செய்ய வர நண்பர் மறுப்பு’’ 2 ரவுடி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு: புளியந்தோப்பில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் நள்ளிரவில் 2 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிரியை மிரட்டுவதற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் 2வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 10 மணி அளவில், மர்மநபர் ஒருவர் பீர்பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து எரித்துவிட்டு அங்குள்ள சீனிவாசன் (80) என்பவரது வீட்டு வாசலில் தூக்கி வீசினார். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அப்போது குண்டு வீசிய நபர், “உனது மகன் வந்தால் மணி வந்துட்டு போனேன்’’ என்று சொல்லு என்று முதியவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதுபற்றி மக்கள் கொடுத்த தகவல்படி, புளியந்தோப்பு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து புளியந்தோப்பு காந்திநகர் 6வது தெரு பகுதியில் வசித்துவரும் விமல் (எ) சிங்கம் விமல் (30) என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது. ஆனால் அது வீட்டுவாசலில் விழுந்து வெடிக்காததால் லேசாக தீ பற்றி எரிந்தது. அந்த தீயை அக்கம்பக்கத்தினர் வந்து அணைத்துவிட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேசின்பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பைக்கில் வந்து 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.இதுகுறித்து புளியந்தோப்பு சரக போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி, உதவி கமிஷனர் அழகேசன் விசாரணை நடத்தினார். இதில், திருவிக.நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த மணி (எ)குள்ளமணி (28) என்பவர்தான் குண்டு வீசியிருப்பது தெரிந்தது.

சரித்திர பதிவேடு குற்றவாளியான மணி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்து திருவொற்றியூர் பகுதியில் தங்கியிருந்துள்ளார். மணியின் மாமா அப்பு (எ) தினேஷ். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஓட்டேரியில் கதிரவன் என்ற கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக குள்ளமணி தனது நண்பரான பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த விமல் என்பவரை அழைக்க வந்துள்ளார். அதற்கு விமல், ‘’ நான் பழையபடி எங்கும் வருவதில்லை’’ என்று கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக விமல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

வாசுகி நகரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், “அந்த பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் குள்ள மணிக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டுள்ளார். செல்வத்துக்கு எதிராக மாரி என்கின்ற லோடாங்கு மாரி செயல்பட்டு வந்துள்ளார். அவரை மிரட்டுவதற்காகவே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அவரது தந்தையை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். மணியுடன் வந்த மற்றொருவர் புழல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா என தெரியவந்துள்ளது. குள்ளமணி மீது திருவிக.நகர், மாதவரம், பெரவள்ளூர் மற்றும் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே அப்பு என்கின்ற ரவுடி கும்பலுக்கும்   கதிரவன் என்கின்ற ரவுடி கும்பலுக்கும்  முன்விரோதம் இருந்தது.

 இதன்காரணமாக அப்பு தரப்பில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கதிரவன் தரப்பில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த குள்ளமணி, அவரது மாமா அப்பு தரப்பை சேர்ந்தவர். இதனால் கதிரவனை கொலை செய்யும் திட்டத்துடன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அப்பு  திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு நண்பர் ஒத்துழைக்காததால் கோபத்தில் நண்பர் வீட்டில் ஒரு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மற்றொரு பெட்ரோல் குண்டை வாசுகி நகரில் வீசியுள்ளார். இதுசம்பந்தமாக புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Pulyanthop , 'Friend refused to come to kill' 2 raider's house petrol bombed in the middle of the night: The incident in Pulyanthop caused a stir
× RELATED சென்னை புளியந்தோப்பில் பிரியாணி...