×

அதிமுக ஆட்சியில் பணிகளை செய்த கான்ட்ராக்டர்கள் வீடுகளில் தொடர்ந்து ஐடி ரெய்டு...எடப்பாடி அவசரமாக நாளை டெல்லி பயணம்: ஜனாதிபதி பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுக ஆட்சியில் பணிகளை எடுத்து செய்த கான்ட்ராக்டர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வரும் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசரமாக நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் எடப்பாடி தூக்கி விட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றுள்ளார். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கடந்த 11ம் தேதி கைப்பற்ற முயன்றார். ஆனால் இரு கோஷ்டிகளும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதையடுத்து கட்சி தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சீலை அகற்ற வேண்டும் என்று இரண்டு தரப்பிலும் நீதிமன்றம் செல்லப்பட்டது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு வழங்க வேண்டும், ஒரு மாதம் வரை கட்சி தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும் வரக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி அணியினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சாவி ஒப்படைக்கப்பட்டாலும் யாரும் கட்சி அலுவலகத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில்  எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை நேற்று முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் பல நூறு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எடப்பாடி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கான்ட்ராக்ட் எடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.

இப்படி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் கட்சிக்குள் இருந்து நெருக்கடி, மற்றொரு பக்கம் தனது நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை, கோடநாடு பங்களா விசாரணை என இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளித்து மீண்டு வர வேண்டும் என்றால், டெல்லியில் உள்ள பாஜ தலைவர்கள் உதவி செய்தால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு எடப்பாடி அணியினர் வந்துள்ளனர்.இந்த நிலையில்தான் பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பிரியாவிடை அளிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பின்னர் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பாஜவின் கூட்டணி கட்சி என்ற சார்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி சந்திக்கும்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் (எடப்பாடி) தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கடந்த 5 வருடங்களாக அளித்த அதே ஆதரவை  பாஜவுக்கு நாங்கள் அளிப்போம். அதேபோன்று, நீங்களும் (பிரதமர் மோடி) அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் டெல்லி மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதேநேரம், தனது நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்களை குறி வைத்து வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அதிமுக கட்சியை பலப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அதனால், வருமான வரி சோதனைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் மிகவும் நெருக்கடியில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த சூழ்நிலையில் டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், டெல்லி பாஜ தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகிய 3 பேர் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாக பாஜ தலைவர் ஒருவர் கூறினார்.

Tags : delhi ,president , Continued IT raids on houses of contractors who did work in AIADMK regime, urgent trip to Delhi tomorrow: President to participate in farewell program
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி