×

தென்ஆப்பிரிக்காவுக்கு கடத்த இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சாமி சிலைகள் மீட்பு: பட்டறை உரிமையாளர் கைது

தஞ்சை: சுவாமிமலை அருகே தென்ஆப்பிரிக்காவுக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஐம்பொன் சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து பட்டறை உரிமையாளரை கைது செய்தனர்.தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற சிலை தயாரிப்பு பட்டறையில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் இந்த சிலைகளை தென்ஆப்பிரிக்காவில் உள்ள சிசோன்கே என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கதிரவன் மற்றும் போலீசார் ‘ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ்’ பட்டறையில் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிருஷ்ணர், திருவாச்சியுடன் கூடிய விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லப கணபதியுடன் அம்மன் என 6 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது ஐம்பொன் சிலைகள் என கூறப்படுகிறது. இந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டறை உரிமையாளரான ராமலிங்கத்தையும்(60) கைது செய்தனர். மேலும் சில ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு ஆவணத்தில் கடந்த 2015ம் ஆண்டு ராமலிங்கம் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப மத்திய தொல்லியல்துறையை அணுகியதும், இந்த சிலைகள் பழமையானவை என தொல்லியல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்ததும் தெரியவந்தது.ராமலிங்கத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்த சிலைகள் ராமலிங்கத்தின் பட்டறைக்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags : South Africa , It was worth several crores of rupees to be smuggled to South Africa Recovery of 6 Sami idols: Workshop owner arrested
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...