×

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மீது 14,098 புகார் மனுக்கள் வந்துள்ளது.: அறநிலையத்துறை விசாரணைக்குழு தகவல்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மீது 14,098 புகார் மனுக்கள் வந்துள்ளதாக அறநிலையத்துறை விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி தகவல் தெரிவித்துள்ளார். கோயில் தொடர்பாக கடந்த ஜூன் 20,21-ம் தேதிகளில் அறநிலையத்துறையின் கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறப்பட்டது.  

அந்த புகார்களை நேரிலும், மின்னஞ்சல், அஞ்சல் மூலமாகவும் மொத்தம் 19,405 மனுக்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வரப்பட்ட மனுக்களை ஆய்வு செய்ததில் 14,098 மனுக்களில் கோயில் நிர்வாகம் மீது குறைபாடுகள் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் மீதான புகார்கள் என்ன என்ன?
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.10,000 கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என ரசீது இன்றி வசூல் செய்வதாக புகார்.  
* ஆண்டு முழுவதும் வீட்டுக்கு பிரசாதம் அனுப்ப ரூ.2,500 வசூலித்து ரசீது வழங்கப்படவில்லை.
* கோயிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை.
* கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற கோரிக்கை
* கோவிலுக்கு வருவர்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பதாவும், பெண்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் புகார்.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை உரிய நேரத்தில் நடைபெறுவதில்லை.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் அனுமதிக்கப்படுவதாக புகார்.
* நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை நட்சத்திர விடுதிபோல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.
* ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணத்தின் போது தொழிலதிபர்கள் காலணியுடன் சென்றதாக புகார்.
* சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அருகே இருந்த நந்தனார் சிலையை தீட்சிதர்கள் அப்புறப்படுத்தி விட்டதாக புகார்.
* தில்லை கோவிந்தப்பெருமாள் கோயிலில் எந்த விழாவும் நடத்தவிடாமல் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளதாக புகார்.
* தீட்சிதர்கள் ஆண்டாள் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
* பைரவர் சன்னதி அருகே சுரங்கத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான ஆபரணங்களை தீட்சிதர்கள் எடுத்து சென்றதாக புகார்.
* பக்தர்களால் வழங்கப்படும் தங்கம், வெள்ளி, பணத்தை ரசீது தராமல் தீட்சிதர்கள் எடுத்துக் கொள்வதாக புகார்.
* குறிப்பிட்ட நேரத்திற்கு தேரோட்டமோ, ஆருத்ரா தரிசனமோ நடத்தாமல் பக்தர்களை பல மணிநேரம் காக்க வைப்பதாக புகார்.

மக்களின் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் கோயில் நிர்வாகம் விளக்கம் அளிக்க அறநிலையத்துறை விசாரணைக் குழு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chidambaram Natarajar Temple Administration , 14,098 complaint petitions received against Chidambaram Nataraja temple administration
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம்...