×

மண்டபம் கடற்பகுதியில் ரூ.20 கோடியில் மீன்பிடி இறங்கு தளப்பணி தீவிரம்

* படகுகள் நிறுத்த வசதி வேண்டும்
* ஆற்று கால்வாயில் ஆழம் தேவை

ராமநாதபுரம்:  மண்டபம் வடக்கு, தெற்கு கடற்பகுதியில் மீன்பிடி இறங்கும் தளம் ரூ.20 கோடி மதிப்பில் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. மண்டபம் வடக்கு தெற்கு கடற்பகுதியில் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மண்டபம் வடக்கு கடல் பாக்ஜலசந்தி, தென்கடல் மன்னார் வளைகுடா ஆகிய 2 பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு, நாட்டுபடகுகளின் பாதுகாப்பு கருதி மண்டபம் வடக்கு, தெற்கு கடற்கரை பகுதிகளில் பல லட்சம் செலவில் கடந்த காலங்களில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு, நாட்டுப்படகுகளின் மீன்பிடி சாதனங்கள் ஏற்றி செல்லவும், கடலுக்கு சென்று கரை திரும்பும்போது கிடைக்கும் மீன்களை இறக்கவும் உதவியாக இருந்து வருகிறது. மேலும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை, மரைன் போலீசாருக்கு சொந்தமான ரோந்து கப்பல், படகுகளை சிரமமின்றி நிறுத்தி வைக்கவும் பேருதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு தளம் சேதமடைந்து அடிப்படை வசதிகளின்றி பொலிவிழந்தது. மேலும் இரவு வேளையில் கடற்கரை பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறும் அச்சம் நிலவியது. ஆற்றுவாய் பகுதி ஆழம் குறைந்து காணப்படுவதால், இந்திய கடலோர காவல் படையின்  ரோந்து கப்பல், விசைப்படகு, நாட்டுப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்த முடியாமல் தரை தட்டும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு தளத்தை செப்பனிட்டு, ஆற்றுவாய் பகுதியை ஆழப்படுத்தி படகுகள் சிரமமின்றி தொழிலுக்கு சென்று வரவும், ரோந்து கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மண்டபம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜாகீர் உசேன், விஜயரூபன், பக்கர், தொத்திரியார்  உள்ளிட்டோர் கூறுகையில், மண்டபம் வடக்கு கடற்பகுதியில் சேதமடைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்க போதிய வசதிகள் இல்லை.

இதனால் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்  காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க இயலாத நிலையுள்ளது. மீன்பிடி இறங்கு தளத்தில் மின்விளக்குகள் எரியாததால் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேற வாய்ப்புள்ளது. இதனால்  மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அனைத்து படகுகளையும் நிறுத்தி வைக்க போதிய வசதிகளுடன் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மண்டபம் வடக்கு (பாக்ஜலசந்தி) தென் (மன்னார் வளைகுடா) கடற்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மீனவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடி மதிப்பில் 2 மீன்பிடி இறங்கு தளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரானது. இந்நிதியை மீன்வளம் மற்றும் நீர்வள மேம்பாட்டு உள்கட்டமைப்பு  நிதியம் கடந்த 2021ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மண்டபம் தெற்கு, வடக்கு தோப்புக்காடு ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ.10 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஜூலை தொடங்கி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீட்டுபடி தென் பகுதியில் 150 மீட்டா் நீளம், 53 மீட்டா் அகலத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. வடக்கு கடற்பகுதியில் 100 மீட்டா் நீளம், 103 மீட்டா் அகலத்தில் மீன்பிடி இறங்குதளம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தலா ஒரு மீன் ஏலக்கூடம் கட்டப்படவுள்ளது. மண்டபம் வடக்கு, தென் கடற்பகுதிகளில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணியில் தற்போது 80 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. நடப்பாண்டு பருவ மழை தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியை விரைந்து முடிக்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mandapam , Intensification of fishing landing site work at Rs.20 crore in Mandapam sea area
× RELATED பாம்பன் சுவாமி கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை