சிவகாசியில் செயல்படாமல் கிடக்கும் சிக்னல்கள்; அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து நிலவுகிறது. சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாநகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கார், டூவீலர், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகாசி மாநகரில் உள்ள விருதுநகர், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, சாத்தூர், விளாம்பட்டி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் இருக்கும். நகரில் போக்குவர்துது நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ்நிலையம் சந்திப்பு, காரனேசன் பஸ் நிறுத்தம், கம்மவார் கல்யாண மண்டப விலக்கு, பைபாஸ் சாலை, இரட்டை பாலம் ஆகிய இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்னல்கள்  அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது.

 இதன்பின்னர் செயல்படாமல் தற்போது வரை காட்சி பொருளாக நிற்கிறது. போககுவரத்து நெரிசலான நேரங்களில் போலீசார் பணியில் இருந்தால் மட்டுமே வாகனஓட்டிகள் முறையாக செல்கின்றனர். போலீசார் இல்லாத நேரங்களில் அவசர கதியில் சந்திப்பு சாலைகளில் செல்வதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் சிவகாசியில் சாலை விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேோல் சிவகாசி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து பிரிவில் குறைவான எண்ணிக்கையில் போலீசார் பணியில் உள்ளதால்  வாகன கண்காணிப்பு பணி சரிவர நடைபெறவில்லை. இதனால் சிவகாசி பஜார், விருதுநகர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் 4 ரோடுகள் சந்திப்பு இடமாக உள்ள காரனேசன் விலக்கு பகுதியில் போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இங்கு போலீசாரும் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை.  இதனால் இங்கு அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. சிவகாசி மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு இடங்களில்  எல்லாம் இதே நிலைதான் உள்ளது.

இந்த இடங்களில் வழிகாட்டி போர்டுகள், போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. வெளியூரில் இருந்து சிவகாசி வரும் வாகனஓட்டிகள் வழிதெரியாமல் பாதை மாறி சென்று அலைந்து திரியும் அவலநிலை உள்ளது. இதேபோல் சிவகாசியில் உள்ள போக்குவரத்து டிவைடர், வேகத்தடை, சந்திப்பு சாலை உள்ள இடங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்கள் டிவைடரில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. எனவே சிவகாசி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க   முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்களை செயல்படுத்தி, வாகன விபத்தை  தடுக்க இரவில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை போர்டு வைத்திட வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: