திருத்தணி நகராட்சியில் சுவர் ஓவியபோட்டி: வென்றவர்களுக்கு பரிசு

திருத்தணி: திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில், நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 7ம் தேதி முதல் 9ம்தேதி வரை திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பாட்டு மற்றும் சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் என 30 பேர் கலந்துகொண்டு ‘’எனது குப்பை எனது பொறுப்பு, கழிவுகளை பிரித்தல் நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதில் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பது, பிளாஸ்டிக்கை தவிர்ப்பது அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்போம்’’ போன்ற தலைப்புகளில் பாடல்கள் மற்றும் சுவர் ஓவியம் வரைந்தனர்.

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ராமஜெயம் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் பங்கேற்று முதலிடம் பிடித்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கினர். 2ம் இடம் பிடித்த தனியார் பள்ளிக்கு 3 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களும் 3ம் இடம் பிடித்த தளபதி கே.வினாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் சரஸ்வதி பூபதி வழங்கினார். போட்டியில் பங்கேற்ற 27 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக புத்தக பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் கோபு, பணி மேற்பார்வையாளர் நாகராஜ், மேலாளர், நாகரத்தினம், உதவியாளர் ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: