இலங்கையுடன் முதல் டெஸ்ட் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது பாகிஸ்தான்

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 222 ரன், பாகிஸ்தான் 218 ரன் எடுத்தன. 4 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 337 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 342 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்திருந்தது. இமாம் உல் ஹக் 35, அசார் அலி 6, கேப்டன் பாபர் ஆஸம் 55 ரன்னில் வெளியேறினர்.

அப்துல்லா ஷபிக் 112 ரன், முகமது ரிஸ்வான் 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது. ரிஸ்வான் 40 ரன், ஆஹா சல்மான் 12 ரன் எடுத்து பிரபாத் ஜெயசூரியா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். ஹசன் அலி 5 ரன் எடுத்து தனஞ்ஜெயா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். 27 ரன்னுக்கு 3 விக்கெட் சரிந்ததால் உற்சாகமான இலங்கை வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். எனினும், அப்துல்லா ஷபிக் - முகமது நவாஸ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.

பாகிஸ்தான் 127.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன் எடுத்து வென்றது. அப்துல்லா 160 ரன் (408 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), நவாஸ் 19 ரன்னுடன் (34 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் ஜெயசூரியா 4, ரமேஷ், தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அப்துல்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் காலே மைதானத்தில் ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: