×

வளர்ச்சி பணிகள் குறித்து பூண்டி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான வளர்ச்சி பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது) தமிழ்செல்வி, (கிராம ஊராட்சி) பொற்செல்வி முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 49 ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் செயலர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரூபேஷ்குமார் கலந்துகொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், ‘’ஊராட்சிகளில் பிரதமர் குடியிருப்பு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதை ஒவ்வொரு கிராமங்களிலும் பயனாளிகளை கண்காணித்து விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

குடிநீர் மற்றும் அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்துகொடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஊராட்சிகளில் குடிசை, ஓட்டு வீடுகள் குறித்த முழு விவரங்களை கணகெடுப்பு நடத்தி பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரி ஆகியவை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கணிப்பொறிகள் மற்றும் பிரிண்டரும் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒரு ஊராட்சி மட்டும் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

கிராமங்களில் தேவையில்லாத மின்சார இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதனால், ஊராட்சிகளில் தேவையில்லாத மின் இணைப்பை அகற்றி ஒழுங்குப்படுத்தவேண்டும்’ என்றார்.

Tags : Pact ,Bundi Union , Development works, panchayat president in Bundi union, review meeting
× RELATED ஏரியில் அளவுக்கதிகமாக மண் எடுப்பதை கண்டித்து போராட்டம்