×

தலைமை அலுவலகத்தில் நடந்த கலவர வழக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் மனு: போலீஸ் பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக 4 அதிமுக மாவட்ட செயலாளர்களின் முன்ஜாமீன் கோரிய மனுக்களுக்கு, போலீசார் பதிலளிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசிபாண்டி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200பேர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என 400 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக இபிஎஸ் தரப்பு ஆதரவு தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட செயலாளர் அசோக் உள்பட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். அதனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தோம்.

ஆனால், இந்த வழக்கில் எங்களை தவறாக இணைத்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்.  எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக போலீசார் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Tags : ADMK ,District Secretaries ,Primary Sessions Court , Anticipatory Bail Petition of ADMK District Secretaries in Head Office Riot Case: Primary Sessions Court orders police to respond
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...