நாட்டை விட்டு கோத்தபய ஓடிய நிலையில் இலங்கை புதிய அதிபராக ரணில் தேர்வு: உடனடியாக பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

கொழும்பு: கோத்தபய நாட்டை விட்டு ஓடிய நிலையில் இலங்கையில் புதிய அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகள் பெற்று 9வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ரணில் உடனே பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால், நாடாளுமன்றம் ஒரு வாரம் ஒத்திவக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், விலைவாசி உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இதற்கு காரணமான அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி அதிபர், பிரதமர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், மகிந்த ராஜபக்சே, அமைச்சர்களாக இருந்த சமல், பசில் மற்றும் நமல் ராஜபக்சேக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

ஆனால், அதிபர் கோத்தபய மட்டும் பதவி விலக மறுத்தார். இதனால், ‘கோத்தபய வீட்டுக்கு போ’ என்ற மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கோத்தபயவுக்கு ஆதரவாக செயல்பட்ட பிரதமர் ரணிலையும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளும், மக்களும் போர்க்கொடி தூக்கினர். கடந்த 9ம் தேதி உச்சக்கட்டமாக அதிபர், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தை கைப்பற்றி மக்கள் சூறையாடினர். இதை எதிர்க்கொள்ள முடியாமல் நாட்டை விட்டு ஓடி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய, இடைக்கால அதிபராக ரணிலை நியமித்து, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

ரணில் விக்கிரமசிங்கே, ஜேவிபி கட்சி தலைவர் அனுராகுமார திசநாயகே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி அணி தலைவர் டல்லாஸ் அலகபெருமா ஆகியோர் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி, ரணில் விக்கிரமசிங்கேயும், சஜித் பிரேமதாச கட்சி எம்பிக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி அணி எம்பியான டல்லாஸ் அலகபெருமாவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்தனர். மும்முனை போட்டி ஏற்பட்டாலும், ரணிலுக்கும், டல்லாச் அலகபெருமாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும், மாணவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நேற்று தேர்தல் நடந்தது. இந்த ரகசிய வாக்கெடுப்பில்  இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் சபாநாயகரும் வாக்களித்தார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்த வாக்குகளான 225ல் 223 வாக்குகள் பதிவாகின. எம்பி.க்கள் ஜிஜி பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரம் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால், 219 வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டது.

இதில், ரணில் 134 வாக்குகளும், டல்லாஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் இலங்கையின் 9வது அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடக்கும் விழாவில் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 2024ம் ஆண்டு நவம்பர் வரை இருக்கும். கோத்தபய, ரணில் உள்ளிட்ட அனைவரும் பதவியில் இருந்து ராஜினாமா, ஒட்டு மொத்த அரசு நிர்வாகமே மாறினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் எச்சரித்து இருந்தனர். இதனால், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் உடனடியாக பதவி விலக கோரி, அதிபர் அலுலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்றம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: