சூனாம்பேடு அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச பேருந்து பஸ்களை முதன் முதலில் தேசிய மயமாக்கியது திமுக அரசு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

செய்யூர்: சூனம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், இலவச பேருந்து வழங்கும் நிகழ்சியில்,  ‘பஸ்களை முதன் முதலில் தேசிய மயமாக்கியது திமுக ஆட்சியில் தான்’ என பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார். செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில், பள்ளியில் படிக்கும் சூனாம்போடு மற்றும் அதன்  சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்காக ரூ13 லட்சம் மதிப்பிலான இலவச பேருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில்,  முன்ளாள் மாணவர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு  நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் க.சுந்தர், பனையூர் பாபு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர், புதிய பேருந்தை  பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர். பின்னர், சிறு, குறு தொழில் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இந்தியாவிலேயே ரூ 37 ஆயிரம் கோடியை கல்விக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். மேலும், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர்.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் அறிவித்துள்ளார்.  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பல  நல திட்ட உதவிகள் பெறுகின்றனர்.  தற்போது, ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணம் திமுக ஆட்சி தான். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரி இருக்கிறார்கள் என்றால் அதற்கும் காரணம் திமுக ஆட்சியும், திமுக தலைவரும் அதற்கு காரணம்’ என்றார்.இதனைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது: திமுக ஆட்சிக்கும் பேருந்துக்கும் ஒரு ராசி, ஒரு ஒன்றுமை உண்டு. பஸ்களை முதன் முதலில் தேசிய மயமாக்கியது திமுக ஆட்சி தான்.

போக்குவரத்து துறையை உருவாக்கியதும் திமுக ஆட்சி தான். போக்குவரத்து கழகத்தை உருவாக்கியதில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முக்கிய பங்கு உள்ளது. அதோபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் முதலில் 1989ல் சட்ட மன்றத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது,  சட்ட சபையில் முதன் முதலில் பள்ளி மாணவ, மாணவியர்க்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என உரையாற்றினார். அதன் அடிப்படையில் 6ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கலைஞர் ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.

 இந்த இலவச பஸ் பாசில் பயணம் செய்த 6ம் வகுப்பு மாணவனாக பயணம் செய்தவர்களில் நானும் ஒரு பயனாளி ஆவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று முதல் கையெழுத்து என்னவென்று நானும் ஊரக தொழில்துறை அமைச்சருமான அன்பரசனும் அருகில் இருந்து எதிர்பார்த்தோம். அப்போது, முதல்வர் போட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கு  பஸ்சில் இலவச பயணம் திட்டத்தில் முதல் கையொப்பம். ஆகவே,  திமுகவிற்கும் பேருந்துக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால், அரசு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் சிறப்பாக கல்வி பயில வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளை எங்களை நம்பி அரசு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,  செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன்,  சித்தாமூர் ஒன்றிய திமுக பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய திமுக செயலாளர் சிற்றரசு,  பேரவை தலைவர் இரா.கோபுராஜ்,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சூ.க.ஆதவன், சித்தாமூர் ஒன்றிய குழு துணை தலைவர் பிரேமா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: