×

வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டையில் பயணியர் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியை சுற்றிலும் நாயக்கன்பேட்டை, புதுப்பேட்டை, பூசிவாக்கம், திம்மராஜம்பேட்டை உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள்  கருக்குப்பேட்டை வந்துதான் இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்ற சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தநிலையில் இந்த கருக்குப்பேட்டை பேருந்து நிலையத்தின் நிழற்குடையை அகற்றினர். பின்பு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும்போது பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி இருந்தனர். பொதுமக்கள் கூறுகையில், ‘கருக்குப்பேட்டை பேருந்து நிறுத்தம் சுற்றியுள்ள 20 கிராம மக்களின் பேருந்து நிறுத்தமாகும். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட நகர்புற பகுதிகளுக்கு சென்று வருகிறோம்.

இந்நிலையில், ஒரு சில நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் நனைந்தவாறு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றன. எம்பி, எம்எல்ஏ ஆகியோர் நிதியிலிருந்து பேருந்து நிழற்குடை அமைத்து தந்தால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து உடனடியாக பேருந்து நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராமமக்களும் வலியுறுத்துகின்றனர்.



Tags : Walajabad , Walajabad next to Garukuppet bus stand without passenger shade: public distress
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...