கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் உறவினரிடம் ஐ.ஜி. விசாரணை: வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்

ஆத்தூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் உறவினர் மனைவியிடம் ஐஜி சுதாகர் நேற்று மாலை ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மாஜி அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. ஜெயலலிதா வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் யாரிடம் சென்றது? இந்த கொள்ளை சம்பவம் எதற்காக, யாருக்காக நடந்தது என்பது குறித்து புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகி விட்டதால் தடயங்கள் அனைத்தையும் அழித்து விட்டனர். இதனால் ஆவணங்கள், ஆதாரங்களை  போலீசார் திரட்டி வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தனபால், ரமேசிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று ஐஜி சுதாகர் ஆத்தூர் வடக்குகாடு சக்திநகரில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு வந்தார்.

அவரது மனைவி சித்ரா, தாய் சரசு மற்றும் தந்தையிடம் சுமார் 1 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினார். ஐஜி சுதாகர் கடந்த ஒரு வாரமாக தலைவாசல் வனத்துறை விடுதியில் முகாமிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது’ என்றனர்.

Related Stories: