×

ஸ்ரீமுஷ்ணத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் உட்பட இருவர் கைது

ஸ்ரீமுஷ்ணத்தில்
ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய
சார் பதிவாளர் உட்பட இருவர் கைது


ஸ்ரீமுஷ்ணம், ஜூலை 21: ஸ்ரீமுஷ்ணத்தில் நிலம் தானசெட்டில்மென்டுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், கேமரா ஆபரேட்டர் கைது செய்யப்பட்டனர்.  விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(44). இவர் ராஜேந்திரபட்டினத்தில் தனது தந்தையின் மூன்று ஏக்கர் நிலம், வீடு ஆகியவற்றை தானசெட்டில்மன்ட் மூலம் பதிவு செய்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பொறுப்பு சார் பதிவாளர் பழனிவேலை அணுகியுள்ளார்.

 அதற்கு அவர் ரூ10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.7 ஆயிரம் தருவதாக வேல்முருகன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கடந்த 14ம் தேதி வேல்முருகன் பெயருக்கு தானசெட்டில்மென்ட் பத்திர பதிவு செய்யப்பட்டு பத்திரம் வழங்காமல் இருந்தது. இதுதொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளர் பழனிவேல் (58), கேமரா ஆபரேட்டர் எழலரசன் (27) ஆகியோரிடம் அவர் அளித்தார். அப்போது, மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் அவர்களை கையும்களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விதவையிடம் ரூ.5,000 லஞ்சம்  வாங்கிய பெண் ஆர்ஐ கைது: திருவண்ணாமலை தாலுகா, துரிஞ்சாபுரம் அடுத்த புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுலோச்சனா(60). இவரது கணவர் 2014ல் இறந்துவிட்டார். இந்நிலையில், 2019 முதல் ஆதரவற்ற விதவை உதவித்தொகையை சுலோச்சனா பெற்று வந்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக, மல்லவாடியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற சுலோச்சனா, வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகத்திடம் மனு அளித்துள்ளார். அப்போது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால்தான் மீண்டும் உதவித்தொகை பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுலோச்சனா, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை சுலோசனா, வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகத்திடம் வழங்கினார். அப்போது, ஷாயாஜிபேகத்தை போலீசார் கைது செய்தனர்.


Tags : Srimushnam , Bribery, Sir Registrar, arrested
× RELATED ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்