×

மாஜி அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை: சொத்துக்களை அளவீடு செய்து உறுதிப்படுத்தினர்

பள்ளிபாளையம்: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபடி அவரது சொத்துகளை அளவீடு செய்து உறுதி செய்தனர். அதிமுகவின் அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான, முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, தனது பதவிக்காலத்தில் குறிப்பாக 2016 மே 23ம் தேதி முதல் 2020 மார்ச் 31ம் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நாகம்மாள் வழக்கு பதிவு செய்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கடந்த டிசம்பர் 15ம் தேதி தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தங்கமணிக்கு தொடர்புடைய சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 69 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி ரொக்க பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கமணி அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக சேர்த்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று பள்ளிபாளையம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டில் பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டது. நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் போலீசார் மற்றும் பள்ளிபாளையம் வருவாய் அலுவலர் கார்த்திகா, விஏஓ ரஞ்சித்குமார் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். ஏற்கனவே நடந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் படி சொத்துக்கள் உள்ளதா என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

 இதற்காக கோவிந்தம்பாளையத்தில் உள்ள வீடு, பள்ளிபாளையம் டிவிஎஸ் மேட்டில் உள்ள அவரது டெக்ஸ்டைல், சௌடேஷ்வரி அம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது சாயப்பட்டறை ஆகிய மூன்று இடங்களை பார்வையிட்டு அதன் நீள, அகலங்களை அளவிட்டு பதிவு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது. லஞ்சஒழிப்பு போலீசாரின் இந்த விசாரணையால் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Thangamani , Ex-minister Thangamani, anti-bribery police investigation,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...