×

செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் லாரிகளில் கல், மணல் சப்ளை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆலோ பிளாக் தொழிற்சாலையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு இவரது லாரி இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் மகிமை தாஸ் என்பவர் இயக்கி வந்தார்.

அப்போது செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது லாரியின் முன்பக்கத்தில் இருந்த என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்ட ஓட்டுனர் மகிமை தாஸ் லாரியிலிருந்து கீழே இறங்கி என்ஜினின் முன்பக்க கதவை திறந்த போது லாரி மளமளவென தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது.அதைத் தொடர்ந்து இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. மேலும் சாலையின் நடுவிலேயே லாரி தீப்பற்றி எரிந்ததால் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மூட்டமாக காட்சி அளித்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் லாரி தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Chengalpattu , Sudden fire accident in a lorry on the road near Chengalpattu: Motorists suffer due to traffic congestion
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...