குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்?... அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் ெதாடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழக அரசும் அனுமதி வழங்கியதோடு, மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கடந்த 2013ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பான அறிவிப்பாணை கடந்த 2015ம்  ஆண்டுதான் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள  எம்.டி.எம். என்ற பான்மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கிடங்கில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.250 கோடி அளவுக்கு அந்த  நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்த  சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரி மூலமாக, புகையிலை பொருட்களை  சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக அமைச்சர், போலீஸ் அதிகாரிகளுக்கு  கோடிக்கணக்கான பணம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.  

இதுகுறித்து  உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளர், தமிழக  டி.ஜி.பி.,  ஆகியோருக்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு  ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக குடோன் உரிமையாளர் மாதவராவ்  விசாரணையின்  போது தெரிவித்தார்.

அதேபோல், அப்போதைய அதிமுக அரசில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா மற்றும் அப்போதைய டி.ஜி.பி.,ராஜேந்திரன்,  சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்,  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை  நடத்தியபோது, குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதம், வி.கே.சசிகலா அறையில் இருந்து  கைப்பற்றப்பட்டது.  

இதுதொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சோதனையிடப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் விசாரித்தனர். பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சி.பி.ஐக்கு வழக்கு  மாற்றப்பட்டது. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்  சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர்  ஜார்ஜ், புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த சம்பத் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில்  கடந்த 2017ல் சிபிஐ சோதனை  நடத்தியது. இந்த விவகாரத்தில் குட்கா  வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

இவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுச்சதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ரூ.39.91 ேகாடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்கனவே சிபிஐ முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள் என்பதால், தமிழக அரசும், கவர்னரும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதேபோல, ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதனால் அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்த தமிழக அரசு, கவர்னருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், தற்போது பதவியில் உள்ள சில அதிகாரிகளும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சிபிஐ பரிந்துரை செய்துள்ளது.

அதில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மற்றும் 2 ஐஜிக்கள், ஒரு எஸ்பி உள்பட 12 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த அனுமதி குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அனுமதி கொடுத்தவுடன் 12 அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை வழங்கும். அதன்பின்னர், நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட, தீர்ப்புகள் வழங்கப்படும். இதனால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 12 பேருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories: