×

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசில் 100 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி நிச்சயம்: பாஜக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய கும்பல் கைது

மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.100 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி நிச்சயம் என்று பாஜக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய கும்பலை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு இம்மாத தொடக்கத்தில் பதவியேற்றது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 15 அமைச்சர் பதவிகளும், பாஜகவுக்கு 28 அமைச்சர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அமைச்சர் பதவியை பெற எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், எம்எல்ஏக்களை அமைச்சர் ஆசை காட்டி சிலர் ஏமாற்ற முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் தவுண்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ ராகுல் என்பவரின் உதவியாளர் பாலகிருஷ்ணாவுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, தனது பெயர் ரியாஷ் ஷேக் என்றும், தனக்கு டெல்லியில் பாஜக தலைமையுடன் நல்ல செல்வாக்கு இருப்பதால், ராகுல் குல்லுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதற்காக எம்எல்ஏவை சந்தித்து பேசவேண்டும் என்றும் கூறியுள்ளார். போனில் பேசிய நபரின் பேச்சை நம்பி, மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் ராகுலும், ரியாஷ் ஷேக்கும் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் பதவி வேண்டுமானால் ரூ.100 கோடிக்கும் மேலாக செலவாகும் என்று ரியாஷ் தெரிவித்தார். நீண்டநேரம் பேரம் பேசப்பட்டு இத்தொகை ரூ.90 கோடியாக குறைக்கப்பட்டது. மேலும், அடுத்த முறை சந்திக்கும் போது முதல் கட்டமாக 20 சதவீத தொகையை தருவதாக எம்எல்ஏ ராகுல் கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தனது கட்சி தலைவர்களிடம் ராகுல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையில் இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களின் ஆலோசனையின்படி, பணம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறி ரியாஷ் ஷேக்கிற்கு போன் செய்தார். அதனை நம்பிய ரியாஷும் அவனது கூட்டாளிகளும் பணத்தை வாங்க ஓட்டலுக்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவருரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். ரியாஷ் தவிர யோகேஷ் குல்கர்னி, சாகர் சங்க்வி, ஜாபர் உஸ்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஜாபர் உஸ்மான் மூளையாக செயல்பட்டதாகவும், இந்த கும்பலின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Maharashtra ,Chief Minister ,Eknath Shinde ,BJP ,MLA , If Maharashtra Chief Minister Eknath Shinde pays 100 crores, he will get ministerial post: Mob arrested for bargaining with BJP MLA
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...