இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

காலே: இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சண்டிமால் 76 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது. 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். இமாம் உல் ஹக் 35 ரன்னிலும் அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று பாகிஸ்தான் அணிக்கு வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்துல்லா ஷபிக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுபுறம் சரிந்த வண்ணம் இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எஎடுத்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷபிக்160 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories: