×

ஐகோர்ட் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும் அதிமுக தலைமை அலுவலகம் : ஓ பன்னீர் செல்வத்திற்கு கடும் பின்னடைவு!!

சென்னை : அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.அந்த தீர்ப்பில்,அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறோம்.

ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. அதிமுக அலுவலகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் வகையில் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடுகிறோம்.அதிமுக அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்,இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஈபி இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : AIADMK ,Edappadi Palaniswami ,I-Court ,Panneer Selvam , I Court, Edappadi Palaniswami, ADMK, Office,: O Panneer Selvam
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...