நொய்யல் ஆற்று தடுப்பணையில் குவிந்த பிளாஸ்டிக் பொருட்கள்-தண்ணீர் செல்வதில் சிக்கல்

தொண்டாமுத்தூர் : கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வார காலமாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் பெரிய ஆறு,  சின்ன ஆறு, வாய்க்கால், கல்லாறு உட்பட துணை ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் முதல் அணைக்கட்டு சித்திரை சாவடியில் இருந்து கோவையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப மதகு மூலம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் மரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மதகுகளை அடைத்து நிற்கின்றன. இதனால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நொய்யல் ஆற்றில் வெள்ளம் குறைந்து கோவையிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் மதகுகளில் குப்பை, மரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என மலைபோல் குவிந்துள்ளன. இதனால் சீரான தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குப்பை கூளங்களை அகற்றி கோவை குளங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

தடையை மீறி குளியல்: கோவை அருகே நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக முதல் அணைக்கட்டு ஆன சித்திரைச்சாவடி அணையில் துணி துவைக்கவும் குளிக்கவோ ஆற்றை கடக்க கால்நடைகளை  கழுவுதல் செல்பி எடுப்பதும் கூடாது என பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இருப்பினும் எச்சரிக்கையும் மீறி சிலர் குளித்து வருகின்றனர். இதனால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: